Pushpavanam Kuppusamy & Anitha Kuppusamy

About Me

முனைவர். புஷ்பவனம் குப்புசாமி

நான் புஷ்பவனம் குப்புசாமி. தமிழிசைக் கலைஞன். எல்லா வகைப் பாடல்களையும் பாடும் திறன்கொண்ட இசைக் கலைஞன். குறிப்பாக மக்களிசையை முதன்மையாகப் பாடி வருபவன்.

தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியுள்ளது. சென்னை சத்யபாமா பல்கலைக் கழகம் எனக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறையில் M.A., M. Phil., வரை படித்து பட்டம் பெற்றுள்ளேன்.

தற்போது 'மக்களிசையின் மாண்புகள்' என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக சென்னை, இராணி மேரிக் கல்லூரி இசைத் துறையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

மக்களிசை, பக்தி இசை, மெல்லிசை தமிழிசை இவைகளை மேடைகளில் தனித் தனியாகவும் ஒருங்கினைத்தும் இசை நிகழ்ச்சியாக வழங்கி வருகிறோம்.

சென்னைப் பல்கலைக் கழக இசைத் துறையில் பயின்ற அனிதாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன்.

வெளிநாடுகளுக்குச் சென்று தமிழர்கள் நடத்தும் விழாக்களில் என் துணைவியாருடன் இணைந்து இசைக் குழுவினரோடு சேர்ந்து இசை நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறோம்.

தமிழ், தமிழர், தமிழர்க் கலை மற்றும் பண்பாடு இவைகளை முன் வைத்து இசை நிகழ்ச்சிகளைத் தருகிறோம்.

மக்களிசை, பக்தி இசை, தமிழிசை, சமுதாய விழிப்புணர்வு, சிறுவர் பாடல்கள் இவைகளை இசைக் குறுந்தகடுகளாகப் பாடியுள்ளோம்.

மக்களிசைப் பாடல்கள், சிறுவர் பாடல்கள், பழமொழிக் கதைகள், விடுகதைகள் என பல நூல்கள் எழுதி சென்னை வனிதா பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளேன்.

தொலைக்காட்சி ஊடகங்களில் மக்களிசை, பழமொழிக் கதைகள், சூப்பர் சிங்கர், சன் சிங்கர், ஊரும் பேரும், வாங்க பேசலாம் போன்ற புகழ் பெற்ற நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளேன்.

தமிழ்மொழி மீதும் தமிழர் கலை, பண்பாட்டின் மீதும் உணர்வு மிக்கத் தமிழனாக வாழ்பவன்.